விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் விதைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.
மக்காச்சோளம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர் என்பதால், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் இதனை சாகுபடி செய்து வருகின்றனர். மழை பெய்துள்ள நிலையில், மண்ணில் போதுமான ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால் விதைப்பு பணிகள் வேகமடைந்துள்ளன.
விதைக்கு ரூ.100 மானியம்
இதனிடையே, மக்காச்சோள விதை வினியோக திட்டத்தின் கீழ் ஒரு கிலோ விதைக்கு ரூ.100 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு 15 கிலோ வரை மானிய விலையில் விதைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறலாம் என சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

