நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால், அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் தங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் வீடுகளின் முன்பாகவும், பொது இடங்களிலும் குவித்து வைத்திருந்த நிலையில், திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தன.
திறந்தவெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள்
அதேபோல், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் போதிய பாதுகாப்பு வசதியின்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
திடீர் மழையால் இந்த நெல் மூட்டைகளும் நனைந்தன. நெல் ஈரமாகியுள்ளதால் முளைக்கும் அபாயம் இருப்பதாகவும், இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
“ஓரிரு நாட்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்”
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான ஈரப்பதம் அறியும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் கொள்முதல் நிலையங்கள் முழுமையாக திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில், தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்துள்ளது.
மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, முக்கூடல் காந்தி சிலை அருகே முதியவர் ஒருவர் மழையில் நனைந்து குளித்த நிலையில், உற்சாகத்தில் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

