பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் முதல் போக நெல் சாகுபடி செய்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனைமலை பகுதியில் ஆழியாறு அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, ஆனைமலை நுகர்பொருள் வாணிபக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் திறந்து வைத்து, முதல் கொள்முதலை தொடங்கி வைத்தார். நடப்பு கொள்முதல் பருவத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,750-க்கும், பொதுரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,600-க்கும் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் ஆனைமலை பகுதியில் இருந்து 2,550 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்தில் வழங்கி பயன்பெறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்பம், காட்டுப்பன்றிகளால் விளைச்சல் பாதிப்பு
இதனிடையே, இந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களில் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வெப்பநிலை அதிகரித்துள்ளதால் நெற்பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளதாகவும், நெல் வயல்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயி விசாகபதி தெரிவித்துள்ளார்.இதனால் இந்த ஆண்டு நெல் சாகுபடி மற்றும் விளைச்சல் இரண்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அக்டோபர் 1 முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

