விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பள்ளி மாணவ–மாணவியருக்கான மாவட்ட அளவிலான கராத்தே போட்டி உற்சாகமாக நடைபெற்றது. 5 வயது முதல் 17 வயது வரை, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை பயிலும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகள் கட்டா (Kata) மற்றும் குமிட்டே (Kumite) ஆகிய இரண்டு பிரிவுகளில், வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன. மாணவ–மாணவியர் வீரத்திறன், தற்காப்புக் கலை நுட்பம் மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மொத்த புள்ளிகள் அடிப்படையில் வத்திராயிருப்பு கிரீன் பீல்ட்ஸ் தனியார் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும், முதல் மூன்று இடங்களைப் பிடித்த 72 மாணவ–மாணவியர், வரும் நவம்பர் மாதம் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

