தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றும், ஆனால் அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவது, மக்களை சந்திக்க விடாமல் தடுப்பது அல்லது வன்முறையில் ஈடுபடுவது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் கூறியிருப்பதாவது:
அரசியல் என்பது கருத்துகளுக்கான களம். அதில் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளும், விமர்சனங்களும் இருப்பது இயல்பானது. ஆனால் கருத்து வேறுபாடுகளுக்கு பதிலாக வன்முறையைத் தேர்ந்தெடுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் நடைமுறை அல்ல.
ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகி, வேட்பாளர் அல்லது மக்கள் பிரதிநிதி மக்களை சந்திக்கச் செல்லும்போது அவரை தடுத்து நிறுத்துவது, அச்சுறுத்துவது அல்லது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகளை பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தேர்தல் காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மக்களை நேரடியாக சந்தித்து தங்களது கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கும் உரிமை இருப்பதாகவும், அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதை முடிவு செய்யும் உரிமை மக்களுக்கே இருப்பதாகவும் கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் போட்டியை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்றும், அரசியல் போட்டி கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர்கள் மீதான தாக்குதலாக மாறக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். கொள்கையை கொள்கையால் எதிர்கொள்ளுங்கள். மக்களின் தீர்ப்பை மக்களிடமே விட்டுவிடுங்கள்” எனவும் கனிமொழி சந்தோஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க முடியாது என்றும், தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிக்க முடியாது; மக்களே இறுதி தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தில் போட்டியிடலாம், ஆனால் வன்முறையை அரசியல் கருவியாக பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்திய கனிமொழி சந்தோஷ், மக்களின் குரலுக்காகவும் உரிமைகளுக்காகவும் தவெக தொடர்ந்து ஜனநாயக வழியில் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

