கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் 1,008 கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் கலைஞர்கள் கட்டைக்கால் கட்டிக்கொண்டு பரதநாட்டியம் ஆடியது விழாவின் சிறப்பு அம்சமாக அமைந்தது.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை, அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் அரசு சமூக வானொலி 90.4 ஆகியவை இணைந்து நடத்திய ‘பக்தியும் பரதமும் 2026’ நாட்டியாஞ்சலி விழா, கோவிலாச்சேரி அரசு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கங்கைகொண்ட சோழபுரத்தை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் 1,008 கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு வேடங்களில் பரதநாட்டியம்
விழாவில் திருவையாறு ஸ்ரீ ஆடல்வல்லான் இசை நாட்டிய சாம்ராஜ்ய நிறுவனர் கலைச்சுடர்மணி வஜ்ரவேல் கலியமூர்த்தி வரவேற்றார். அரசு இன்ஜினியரிங் கல்லூரி நிறுவனர் ஆர்.திருநாவுக்கரசு விழாவை தொடங்கி வைத்தார்.
கல்லூரி தலைவர் டி.செந்தில்குமார், இயக்குனர் எஸ்.அரவிந்த், முதல்வர் டி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் பாடலான கணபதி பாடலுக்கு கணபதி மற்றும் முருகன் வேடங்களில் கலைஞர்கள் நடனமாடினர். தொடர்ந்து ராஜேந்திர சோழன் பாடலுக்கு ராஜேந்திர சோழன் மற்றும் குந்தவை வேடங்களிலும், சிவன் பாடலுக்கு சிவன் மற்றும் பார்வதி வேடங்களிலும் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
நிறைவாக மாணவ, மாணவிகள் பாரம்பரிய நாட்டிய நிகழ்வான ‘மங்களம்’ நிகழ்ச்சியை தேசபக்தி உணர்வுடன் அரங்கேற்றினர்.
கட்டைக்கால் அணிந்து பரதநாட்டியம்
விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, கலைஞர்கள் கட்டைக்கால் கட்டிக்கொண்டு பரதநாட்டியம் ஆடினர். இதுபோன்ற நிகழ்வு இதுவரை எந்த பரதநாட்டிய மேடையிலும் நடைபெற்றதில்லை என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
ராஜேந்திர சோழன் வரலாறு குறித்து சிறப்புரை
மண்டல உதவி இயக்குனர் ம.ராஜாராமன், தமிழ் பல்கலைக்கழக தகைசால் பேராசிரியர் பொறியாளர் இரா.கோமகன், துளசி சீனிவாசன், ரோட்டரி முன்னாள் ஆளுநர் எஸ்.பாலாஜி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சி.வரதராஜன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பேராசிரியர் இரா.கோமகன், மாமன்னர் ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று தகவல்களை விரிவாக எடுத்துரைத்தார்.
விழாவில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு மாமன்னர் ராஜேந்திர சோழன் விருது, குந்தவை விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ மார்பிள்ஸ் நிறுவனர் டாக்டர் செழியன் செய்திருந்தார். நிகழ்ச்சியின் நிறைவில் தமிழன் தொலைக்காட்சி நிருபர் ஆர்.யேசுராஜ் நன்றி கூறினார்.

