SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்து, அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதையொட்டி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இருந்த உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கும், தலைமை தேர்தல் ஆணையருக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலை மறியல்
பின்னர் கட்சி அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக புறப்பட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்றனர்.
அங்கு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.
பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு
இந்தப் போராட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், மாவட்டத் தலைவர்கள் ராமேஸ்வரன், துரை, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், விவேக் முருகன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

