“வளைகாப்பு பெண்களுக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல; கர்ப்பிணிகளை கவனிக்கும் பொறுப்பு ஆண்களுக்கும் உண்டு” – கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ்
கோவை வடமதுரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் சார்பில் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது.
விழாவில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
கணவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பொறுப்பு
நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் கூறியதாவது:
வளைகாப்பு என்பது பெண்களுக்கான நிகழ்ச்சி என்று மட்டும் பார்க்கக்கூடாது. ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கும் காலத்தில் அவருக்கு மட்டுமல்லாமல், கணவர் மற்றும் குடும்பத்தினருக்கும் கூடுதல் பொறுப்பு ஏற்படுகிறது.
பொதுவாக ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனைவியின் நலனை கவனிப்பதுடன், வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக மன ஆரோக்கியமும் முக்கியமானது. எனவே, பெண்களுக்கு மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான சூழலை குடும்பத்தினர் ஏற்படுத்தித் தர வேண்டும்.
கணவர்கள் தங்களது மனைவியை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவு வழங்குதல், போதிய ஓய்வு அளித்தல், மருத்துவப் பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்லுதல், மனநிம்மதியுடன் இருக்க உதவுதல் உள்ளிட்ட அனைத்து வகையிலும் துணையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் மனநிம்மதியான கர்ப்ப காலம் கிடைக்க வேண்டும். ஆரோக்கியமான தாயால் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
“அனைத்து தரப்பினருக்கும் நலன்கள் சென்றடைய வேண்டும்”
மேலும், பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
“அனைத்தும் அனைவருக்கும்” என்ற வகையில் மக்கள் நலனை முன்னிறுத்தி மக்கள் முதல்வர் விஜய் செயல்பட்டு வருவதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணிடமும் தவெக அரசும், மக்கள் முதல்வர் விஜயும் எப்போதும் உடனிருப்பார்கள் என்ற நம்பிக்கையை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

