இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதியுள்ள சுயசரிதை நூலை, பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் நாளை (ஆகஸ்ட் 12) வெளியிடுகிறார்.
இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராகக் கடந்த 2017 முதல் 2022 வரை பொறுப்பு வகித்த ராம்நாத் கோவிந்த், தமது நீண்டகால அரசியல் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளார்.
இந்நூலுக்கு ‘இந்திய குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்’ (Triumph of the Indian Republic: My Life, My Struggles) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்ற உள்ளார்.
நாட்டின் உயரிய அரசியலமைப்புச் சட்டப் பதவியான குடியரசுத் தலைவர் பொறுப்பில் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் பொதுவாழ்வில் அவர் சந்தித்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அரசியல் மற்றும் பொது வட்டாரங்களில் இந்நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

