தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பேரவை நடவடிக்கைகளில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டாலும் அவை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வடிவில் வேகமாகப் பரவி வருவதாகக் கூறினார். இதனால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதன் நோக்கம் பயனற்றதாகிவிடுகிறது என அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் பிரபாகர் பேரவையை சிறப்பாக வழிநடத்தி வருவதாக பாராட்டிய உதயநிதி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆதாரமின்றி முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினரைவிட ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகளை அதிகமாக நீக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலையில் ஒளிபரப்பப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பாடல்கள் உள்ளிட்டவை இடம்பெறுவதைக் குறிப்பிட்டு, “நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா?” என கேள்வி எழுப்பினார்.
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் அதிகளவில் பகிரப்படுவதால், அவற்றை நீக்குவதில் பயன் இல்லாமல் போய்விடுகிறது என்பதை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உதயநிதி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற ரீல்ஸ் வெளியானதாகக் கூறி எதிர்வினையாற்றினார். மேலும், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவதாக திமுக அளித்த வாக்குறுதி ஏன் நிறைவேற்றப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், முதல்வரின் மேஜையில் உள்ள கோப்புகளை விரைவாகத் திறந்து பார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

