தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.இதன் முதற்கட்டமாக, வரும் 6ஆம் தேதி அனைத்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் செல்லவுள்ளனர். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட உள்ளன.
திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்களின்படி, நெல்லை மாவட்டத்தில் வரும் 13ஆம் தேதியும், தென்காசி மாவட்டத்தில் 14ஆம் தேதியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மேலும், வரும் 15ஆம் தேதி சென்னையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்ததுடன், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டார்.
குலவணிகுபுரம் மேம்பாலம் குறித்த கேள்விக்கு விளக்கமளித்த எம்.பி. ராபர்ட் ப்ரூஸ், இப்பாலத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இப்பாலம் மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு, தமிழக அரசால் ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரு வழிப்பாதையாக உள்ள இப்பாலம், நான்கு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருவதால் சில வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விரைவில் பணிகள் தொடங்கும் என்று உறுதி அளித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் மாநகர மாவட்டத் தலைவர் ராமேஸ்வரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

