தமிழகத்தில் தவெக ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, நிலைமை அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டதாகவும், சமூக வலைதளங்களில் மட்டுமே ஆட்சி நடைபெறுவதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொள்ளாச்சிக்கு வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அங்குள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். பாஜகவை தோற்கடிக்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி 13 ஆண்டுகள் குஜராத் முதலமைச்சராகவும், அதன்பின்னர் பிரதமராகவும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக தற்போது இல்லாமல் இருக்கலாம் என்றும், ஆனால் வரும் காலங்களில் தமிழகத்தில் பாஜக தனது செல்வாக்கை மட்டுமல்லாமல் முழு அரசியல் அதிகாரத்தையும் நிலைநாட்டும் என்றும் அவர் கூறினார்.
இடைத்தேர்தல் குறித்து விமர்சனம்
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்கள் தேவையற்ற தேர்தல்கள் எனக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்ற பின்னர் ராஜினாமா செய்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற சம்பவங்களின் பின்னணியில் குதிரை பேரம் நடைபெற்றிருக்கலாம் என குற்றம்சாட்டிய அவர், இதற்கு தமிழக முதலமைச்சரே முழு பொறுப்பு என்றும், இது தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மின்வெட்டு – பொருளாதார வீழ்ச்சி குறித்து குற்றச்சாட்டு
தவெக ஆட்சியின் முதல் 144 நாட்களில் 500 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றில் 30 பேர் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் தவெகவினராக இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை.
மேலும், தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு அதிகரித்துள்ளதாகவும், இதனால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும், மக்கள் சார்ந்த ஆட்சி நடைபெறவில்லை என்றும் விமர்சித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
“தமிழகத்தில் தற்போது சமூக வலைதள ஆட்சிதான் நடைபெற்று வருகிறது” என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.

