கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள நாகம்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமியிடம், நாகம்பள்ளி, கேத்தம்பட்டி, செல்லிபாளையம், சின்னபுதூர், பெத்தான்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "நாகம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளன. இப்பகுதியில் தற்போது புதிதாக பெரிய அளவிலான கோழிப் பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பண்ணையில் சுமார் 2 லட்சம் கோழிகள் வளர்க்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
அரசின் விதிமுறைகளை மீறி இந்த கோழிப் பண்ணை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதனால் மேற்கண்ட கிராமங்களில் மக்கள் அமைதியாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகும். கோழிப்பண்ணை காரணமாக கொசு மற்றும் ஈக்களின் உற்பத்தி பெருமளவில் அதிகரித்து, அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் உணவு உட்கொள்ள முடியாத அளவுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் கால்நடை வளர்ப்புத்துறையின் கூட்டு நேரடி ஆய்வுக்குழு உடனடியாக கள ஆய்வு நடத்த வேண்டும். கோழிப்பண்ணை எல்லையிலிருந்து 500 மீட்டருக்குள் உள்ள வீடுகள், குடியிருப்புகள், தோட்டப் பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இந்த கோழிப்பண்ணைக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.









