Settings

முகப்பு/செய்திகள்/ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு கோரி திருச்சியில் டிஜிட்டல் கல்விப் பணியாளர்கள் உண்ணாவிரதம்
செய்திகள்

ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு கோரி திருச்சியில் டிஜிட்டல் கல்விப் பணியாளர்கள் உண்ணாவிரதம்

🕒 29 செப்., 2026, 09:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு கோரி திருச்சியில் டிஜிட்டல் கல்விப் பணியாளர்கள் உண்ணாவிரதம்
✨

AI Highlights

  • •ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே டிஜிட்டல் கல்விப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டிஜிட்டல் கல்விப் பணியாளர்கள் நலச்சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் Administrative-cum-Instructor (ACAI) பணியாளர்களை வெளிமுகமை முறையில் நியமிப்பதை கைவிட்டு, அரசே நேரடியாக பணியமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

மாநிலத் தலைவர் இலக்கியா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சங்கத் தலைவர் செந்தில்நாதன் மற்றும் துணைத் தலைவர் தாஜ் நிஷா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

பணியாளர்களை வெளிமுகமை முறையில் பணியமர்த்தும் நடைமுறையை கைவிட்டு, தமிழ்நாடு அரசே நேரடியாக பணி நிரந்தரம் செய்து பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தற்போது வழங்கப்படும் 11 மாத பணியை, 12 மாத முழுநேரப் பணியாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ரூ.9,700 ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தல்

தற்போதைய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, மாதம் ரூ.9,700 என்ற ஊதியத்தை மறுபரிசீலனை செய்து நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்தினர்.

மேலும், டெண்டர் மற்றும் பி.ஓ.க்யூ. விவரங்களில் உள்ளதாகக் கூறப்படும் முரண்பாடுகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொழில் வரி மற்றும் இதர வரிகள் முறையாகச் செலுத்தப்படுவது தொடர்பாகவும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

EMIS-ல் மீண்டும் இணைக்க கோரிக்கை

ACAI பணியாளர்களை மீண்டும் EMIS இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சார்பில் நோட்டீஸ், மெமோ உள்ளிட்டவற்றை வழங்கி அச்சுறுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔