கோயமுத்தூர் மளிகை வியாபாரிகள் சங்கத்தின் 70-வது ஆண்டு மகாசபை கூட்டம் கோவையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏ. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வணிகர்களின் வர்த்தக நடைமுறைகள், போக்குவரத்து, விமான நிலையம் மற்றும் ரயில்வே வசதிகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத் தலைவர் ஆர்.எஸ். கணேசன், வி. விக்னேஷ் புகழ்வேந்தன், செயலாளர் பி. மருதராஜன், இணைச் செயலாளர் கே. அம்ரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஆர். அன்புராஜ், 2025–26-ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வரவு–செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு
அரிசி, பருப்பு, சிறுதானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பேக்கிங் அளவைப் பொருட்படுத்தாமல் வரி விலக்கு வழங்க வேண்டும் என GST கவுன்சில் மற்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், E-Invoice மற்றும் E-Way Bill தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
GST தொடர்பான நோட்டீஸ்களைப் பெறுவதற்காக வணிகர்கள் இரண்டு மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் இரண்டு தொலைபேசி எண்களைப் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை நகரில் வாகன நிறுத்துமிடங்களை அதிகரிக்க கோரிக்கை
கோவையின் முக்கிய வணிகப் பகுதிகளான ரங்கைய கவுடர் வீதி, ராஜ வீதி, பெரியகடை வீதி மற்றும் ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், தனியார் வாகன நிறுத்துமிடங்களை உருவாக்குவதற்கு உரிய ஊக்கமும் வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் மற்றும் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், அவிநாசி சாலையில் நீலாம்பூர் வரையிலான உயர்மட்டப் பாலம் நீட்டிப்பு, சிங்காநல்லூர் சந்திப்பு பகுதியில் மேம்பாலப் பணிகள் மற்றும் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் நடைபெறும் பால விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரயில்வே வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
கோவை, வடகோவை, போத்தனூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணியர் ரயில்களை இயக்க வேண்டும் என்றும், இந்தப் பகுதிகளில் உள்ள சரக்கு ரயில் இயக்க வசதிகளை இருகூருக்கு மாற்ற வேண்டும் என்றும் ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சரக்கு ரயில்களுக்காக தனி இருப்புப் பாதைகளை உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதுடன், நடைமேடைகள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளையும் விரிவுபடுத்த வேண்டும் என ரயில்வே துறையை வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில் துணைப் பொதுச் செயலாளர் கே. சபிக் நன்றி தெரிவித்தார். இதையடுத்து கோயமுத்தூர் மளிகை வியாபாரிகள் சங்கத்தின் 70-வது ஆண்டு மகாசபை கூட்டம் நிறைவடைந்தது.

