“மலைக்கிராம மக்களுக்கு பிரச்சினை என்றால் தமிழகம் முழுவதும் 100 விவசாய சங்கங்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” – ஈசன் முருகசாமி
தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 98 மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி தங்களை மலைப்பகுதிகளில் இருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி, வருசநாடு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மலைக்கிராம மக்கள் கடந்த 26-ம் தேதி முதல் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பேருந்து நிலையத்தில் இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்து போராட்டம்
மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு தொடர்பான இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் 29-ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், தங்களுக்கு சாதகமான உத்தரவு வெளியாக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், போராட்டத்தின் நான்காவது நாளான இன்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேரில் பங்கேற்று மலைக்கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
“100 விவசாய சங்கங்களை திரட்டி போராட்டம்”
போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி, மலைக்கிராம மக்களின் உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.அவர் பேசுகையில், “முல்லைப் பெரியாறு, காவிரி நீர் விவகாரங்களில் உச்சநீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த துணை ராணுவத்தை அனுப்ப உத்தரவிடாத நீதிமன்றம், இன்று மேகமலை, வருசநாடு மக்களை வெளியேற்ற துணை ராணுவத்தை அனுப்பக் கூறுகிறது” என தெரிவித்தார்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானாலும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு மலைக்கிராம மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் கூறினார். தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு மலைக்கிராம மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் ஈசன் முருகசாமி வலியுறுத்தினார். “மேகமலை, வருசநாடு மலைக்கிராம மக்களுக்கு பிரச்சினை என்று வந்தால், தமிழகம் முழுவதும் உள்ள 100 விவசாய சங்கங்களை திரட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

