நாடு முழுவதும் நடைபெற்று வரும் ‘தூய்மையே சேவை 2026’ (Swachhata Hi Seva 2026) இயக்கத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி ஊராட்சி அலுவலகத்தில் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
‘தூய்மையே சேவை 2026’ இயக்கம் தூய்மை, சுகாதாரம், கழிவு மேலாண்மை மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான இயக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் தூய்மையை மேம்படுத்துவது முக்கிய நோக்கமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூய்மை குறித்து விழிப்புணர்வு
மத்திய அரசின் விருதுநகர் தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுப்புறத் தூய்மையின் அவசியம், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்து வழங்குதல், குப்பைகளை முறையாக கையாளுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லியாகத் அலி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மத்திய புள்ளியியல் துறை சார்பில் குப்பை சேகரிக்கும் பெட்டி, கைகளை சுத்தம் செய்யும் ‘ஹேண்ட் வாஷ்’ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த இடத்திலேயே தேங்கிய மழைநீர்
இதனிடையே, நேற்று பெய்த மழையால் சத்திரரெட்டியபட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்தத் தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மிதந்ததாகவும், இதனை அங்கு வந்திருந்த பொதுமக்கள் சிலர் கவனித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற அதே வளாகத்தில் மழைநீர் தேங்கி சுகாதாரக் குறைபாடு காணப்படுவதாக பொதுமக்கள் சிலர் தங்களுக்குள் அதிருப்தி தெரிவித்தனர்.தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியுடன், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் சுற்றுப்புறத் தூய்மையையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

