புதுச்சேரியில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் நேற்று காலை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. முத்தியால்பேட்டை சோலைநகர் மீனவ கிராமம் அருகே கடல் பகுதியில் சுழல் காற்று உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பலத்த காற்று வீசியதில் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. எதிரே இருந்த மரம் வேருடன் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையில் விழுந்திருந்த மரம் மற்றும் கிளைகளை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மரம் விழுந்ததால் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக வழக்கமாக பரபரப்பாக காணப்படும் புதுச்சேரி கடற்கரை சாலை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், சில பகுதிகளில் சில மணி நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

