நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே மேட்டுப் பிராஞ்சேரி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேட்டுப் பிராஞ்சேரி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளதாகவும், ஆண்டுதோறும் அங்கு கொடை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கோவில் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு பண்டிகை காலங்களில் பொதுப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், அந்த இடத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகளும் தொடங்கியுள்ளன.
அங்கு கட்டிடம் அமைக்கப்பட்டால் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, இன்று காலை பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் இல்லத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் தங்களது ஆதார் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வீசி எறிந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், கிராம மக்கள் சார்பில் 5 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள், பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாற்றுவது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்தகட்டமாக பாளையங்கோட்டை சிறைச்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

