தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விவசாய சங்கப் பிரதிநிதி ஈசன் முருகசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் நெல்லை மாவட்டக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நடராஜ கண்ணன் தலைமை வகித்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் கடன் வசூல் உள்ளிட்ட களப்பணிகளுக்குச் செல்லும்போது அவர்களை தாக்க வேண்டும் என்ற வகையில் வன்முறையைத் தூண்டும் வகையிலும், தரக்குறைவாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், களப்பணியில் ஈடுபடும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டக் கௌரவத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரேசன், பழனிகுமார், கதிரேசன், இசக்கியப்பன், முகமது உசேன், நம்பிராஜன் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டுறவு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

