விருதுநகரில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 1968 முதல் 1975 காலகட்டத்தில் மருத்துவம் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி “Buds ’68” என்ற பெயரில் நடைபெற்றது. சுமார் 58 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த ஒன்றுகூட்டத்தில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் போது, தங்களது கல்லூரிக்கால நினைவுகள், பேராசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் மருத்துவச் சேவையில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர். மேலும், நீண்டகால நட்பைப் புதுப்பித்துக்கொண்டதுடன், தாய்க் கல்லூரிக்கான பங்களிப்பு மற்றும் சமூகநல மருத்துவச் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மருத்துவர்கள் வருகை தந்திருந்தனர். குறிப்பாக, 80 வயதிலும் ஓய்வுபெற்ற பெண் மருத்துவர்கள் கும்மியடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. இந்நிகழ்ச்சியின் நினைவாக அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் என்று விருதுநகரிலிருந்து மருத்துவர் காளிதாஸ் தெரிவித்தார்.

