அரசு பேருந்து காலதாமதமாக இயக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத வழக்கறிஞருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரமநாயகம், கடந்த மார்ச் மாதம் கொடைக்கானலில் இருந்து பழனிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
காலை 8.37 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட பேருந்து, காலை 10.30 மணியளவில் பழனியை சென்றடையும் என நடத்துநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பழனிக்கு செல்லும் வழியில் பயணிகளை ஏற்றிய நிலையிலேயே பேருந்து உணவகத்தில் நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் டீசல் நிரப்புவதற்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 நிமிட தாமதம்
இதனால் திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக, காலை 11.15 மணியளவில் பேருந்து பழனியை சென்றடைந்துள்ளது. இதன் காரணமாக பழனி நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற இருந்த வழக்கில் தன்னால் ஆஜராக முடியவில்லை என வழக்கறிஞர் பிரமநாயகம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அரசு பேருந்து சேவையில் ஏற்பட்ட குறைபாட்டால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி, இழப்பீடு கோரி திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
பேருந்து சேவையில் குறைபாடு
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் கிளாஸ்டோன் பிளஸ்டு தாகூர், பேருந்து சேவையில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பயணிகளை பேருந்தில் ஏற்றிய பின்னர் டீசல் நிரப்புவதற்காக பணிமனைக்கு பேருந்தை கொண்டு சென்றது முறையான நடைமுறை அல்ல என்றும், பயணிகளை ஏற்றுவதற்கு முன்பாகவே தேவையான அளவு டீசலை நிரப்பியிருக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ரூ.15 ஆயிரம் இழப்பீடு
இதையடுத்து, வழக்கறிஞர் பிரமநாயகத்திற்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் பழனி கிளை மேலாளர் ஆகியோருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசு அல்லது தனியார் பேருந்து சேவையில் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது தொடர்பாக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி நிவாரணம் கோர முடியும் என்பதை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

