விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் ஆலடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்குரனைகுளம் கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) சார்பில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. கிளைச் செயலாளர் தங்கவேல் டெய்லர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் மணிமாறன், சி.பி.ஐ. ஒன்றியச் செயலாளர் சி.செல்வம் மற்றும் கீழக்குரனைகுளம் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
கீழக்குரனைகுளம் கிராமத்தில் சுமார் 30 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் முறையான குடிநீர் வசதி இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் புதிதாக 5 தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாலையோர கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
கல்லூரணி முதல் கீழக்குரனைகுளம் மயானம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் அதிகளவில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குழாய்களில் இருந்து பொதுமக்கள் எளிதாக குடங்களை வைத்து தண்ணீர் பிடிக்கும் வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் நடவடிக்கை – அதிகாரி உறுதி
மனுவைப் பெற்றுக்கொண்ட கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, கிராம மக்கள் மற்றும் சி.பி.ஐ. நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

