தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்–1 எனப்படும் குரூப்–1 முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
குரூப்–1 தேர்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணியிடங்களுடன் கூடுதலாக 20 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து மொத்தம் 46 குரூப்–1 பணியிடங்களை நிரப்பும் வகையில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 21 தேர்வு மையங்களில் மொத்தம் 6,408 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை சுமுகமாக நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிகாரிகள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால், காலை முதலே பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வர்கள் குவிந்தனர். தேர்வர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து வசதி, தடையற்ற மின்சாரம் மற்றும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த குரூப்–1 முதல்நிலைத் தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவடைகிறது.
தேர்வர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
தேர்வர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட்டுடன் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும். மொபைல் போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறும் தேர்வர்கள், TNPSC விதிமுறைகளின்படி அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

