விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொமுச) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மண்டலப் பொதுச் செயலாளர் ராஜ செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது என்றும், கோவை–விருதுநகர் மின் பாதைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச மாவட்ட கவுன்சில் மாடசாமி, மின்சார தொழிற்சங்கப் பிரிவு மண்டலச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்டப் பொருளாளர் திருவேட்டை, தொமுச பொதுச் செயலாளர் சௌந்திரராஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

