விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாச்சலேஸ்வரர் மற்றும் அபிதா குஜலாம்பாள் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், யாககுண்டம் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர், திருக்கோடிக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, மேளதாளம் முழங்க திருக்கோடி கோவிலின் உட்பிரகாரத்தை வலம் வந்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.









