திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தில் பணம் பலமடங்காக இரட்டிப்பாகித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நபரைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் புத்திரன். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஏஜெண்டுகளாக நியமித்து, பொதுமக்களிடம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு பல மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளார். பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் இன்று சங்கர் புத்திரனின் சொந்த ஊரான சாலை கிராமத்திற்கு வருகை தந்தனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததைக் கண்ட அவர்கள் ஆத்திரமடைந்து, திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மோசடி செய்தவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.









