நாகூர் அடுத்த மேலவாஞ்சூர் அமிர்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். கடந்த நவம்பர் 18-ஆம் தேதி இரவு, அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ (POCSO) சட்டத்தின் 7 மற்றும் 8 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், நாகூர் பகுதியில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.









