கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பயணித்த கார் திடீரென தீப்பற்றி முற்றிலும் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து 4 சுற்றுலா பயணிகள் காரில் வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அட்டகட்டி சோதனைச்சாவடியை கடந்து சென்றபோது, காரில் இருந்து திடீரென புகை வந்ததாக கூறப்படுகிறது.
காரில் இருந்து இறங்கியதும் தீப்பற்றியது
இதனை கவனித்த 4 பேரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கினர்.
அவர்கள் காரை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, கார் திடீரென மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ வேகமாக பரவியதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
காரில் இருந்த 4 சுற்றுலா பயணிகளும் தாமதிக்காமல் வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

