நெல்லை சந்திப்பு பகுதியில் பள்ளி மாணவரை வழிமறித்து தாக்கிய சம்பவத்தில் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 10 பேர் சிறுவர்கள் என்பதால் சிறார் நீதிக் குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
நெல்லை வண்ணார்பேட்டை அப்பர் சுவாமி தெருவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு 11-ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பள்ளி வளாகத்தில் இரு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாழையூத்தைச் சேர்ந்த மாணவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தென்காசி சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி மாலை பள்ளி முடிந்து வண்ணார்பேட்டையைச் சேர்ந்த மாணவர் வெளியே வந்துள்ளார். அப்போது பள்ளி வாசல் அருகே காத்திருந்த தாழையூத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவரும், அவரது நண்பர்களும் அவரை வழிமறித்துள்ளனர்.
“உன்னால்தான் நான் பள்ளியை விட்டு நீக்கப்பட்டேன்” எனக் கூறி, தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அந்த மாணவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சக மாணவர்கள் அங்கு ஓடி வந்ததைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 10 பேர் சிறுவர்கள் என்பதால், அவர்களை சிறார் நீதிக் குழுமம் முன்பு ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

