திருச்சி உறையூர் சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சீராத்தோப்பு பாரதியார் குருகுலம் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அகிலாண்டேஸ்வரி வரவேற்றார்.
முதுகலை கணித ஆசிரியர் ஸ்ரீதர், உடற்கல்வி ஆசிரியர் கல்பனா, யோகம் பிசியோதெரபி சென்டர் இயன்முறை மருத்துவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் சரவணன், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசனத் தலைவர் ஹேமலதா, சங்க சாசனச் செயலரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார், ஸ்ரீ சக்ரா இயற்கை மருத்துவம், யோகா மற்றும் அக்குபஞ்சர் மருத்துவமனை முதன்மை மருத்துவர் கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி
நிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதுடன், தாங்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதாக உறுதிமொழி ஏற்றனர்.
மேலும், தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பதுடன், போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு நல்வழிப்படுத்த தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதாகவும் உறுதியேற்றனர்.
தமிழகத்தில் போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் பயன்பாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசுக்கு துணை நிற்பதுடன், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் மாணிக்கம் நன்றி கூறினார்.

