நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், இன்று பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனை தொடங்கியதும் அலுவலக கதவுகள் மூடப்பட்டு, அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அலுவலக பணிகளுக்காக வந்திருந்த பொதுமக்களிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும், மண்டல அலுவலகத்தின் அன்றைய வரவு-செலவு கணக்குகள், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களிடம் இருந்த பணம் உள்ளிட்டவற்றையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்தனர்.
கணக்கில் வராத பணம் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது சோதனை நிறைவடைந்த பின்னரே தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

