விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கைத்தறி நெசவாளர்கள், தாங்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக வெளியான தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 16-வது நாளாக கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய ரக சேலைக்கு ரூ.250 கூலி நிர்ணயம் செய்ய வேண்டும், வேலை இழந்த 5 மாதங்களுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், கையிருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், தறிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கான முழு செலவையும் அரசு ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நெசவாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, 10 நாட்களுக்குள் கோரிக்கைகள் குறித்து முடிவு எட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று நெசவாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி நேற்று மாலை சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தியாளர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் தகவல் வெளியிட்டதாக நெசவாளர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் குறித்து இன்று புனல்வேலியில் நடைபெற்ற நெசவாளர்கள் மகாசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, கூலி உயர்வு, நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, தங்களுக்கு சாதகமான அரசாணை வெளியாகும் வரை போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் வரை ஊர்வலமாக சென்று, 16-வது நாளாக கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களது போராட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு எதிராக நெசவாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், தாங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

