மத்திய அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியான EPF-க்கான கட்டாய ஊதிய உச்சவரம்பை மாதம் ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் 2026 செப்டம்பர் 17 முதல் அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் இதுவரை EPFO-வின் கட்டாய வரம்புக்கு வெளியே இருந்த மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் பெறும் பல ஊழியர்கள் EPF, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வர உள்ளனர். இந்த மாற்றத்தால் சுமார் 51 லட்சம் புதிய ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Take-Home சம்பளம் குறையுமா?
ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், புதிய வரம்புக்குள் வரும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து EPF-க்கு செலுத்தப்படும் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சில ஊழியர்களுக்கு மாதந்தோறும் கையில் கிடைக்கும் Take-Home சம்பளம் குறையக்கூடும்.
எவ்வளவு குறையும் என்பது ஊழியரின் சம்பள அமைப்பு, EPF பங்களிப்பு கணக்கிடப்படும் முறை மற்றும் நிறுவனத்தின் CTC அமைப்பு உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து மாறுபடும். சில கணக்கீடுகளில் ஊழியரின் பங்களிப்பு அதிகரிப்பதால் மாத Take-Home சம்பளத்தில் சுமார் ரூ.1,200 வரை மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. CTC அமைப்பைப் பொறுத்து நிறுவனத்தின் பங்களிப்பும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால், ஒவ்வொரு ஊழியருக்கும் ஏற்படும் தாக்கம் ஒரே மாதிரியாக இருக்காது.
ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் அதிகமான தொழிலாளர்களை ஒழுங்கமைக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதாகும். EPF சேமிப்பு அதிகரிப்பதுடன், தகுதியான ஊழியர்களுக்கு EPS ஓய்வூதியம் மற்றும் EDLI காப்பீட்டு பாதுகாப்பும் விரிவடையும்.
மேலும், ஊழியர்களின் ஓய்வுக்கால சேமிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. அதே நேரத்தில், தற்போதைய சம்பளத்தில் உடனடியாக கிடைக்கும் தொகை மற்றும் நீண்டகால சேமிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான மாற்றத்தை ஊழியர்கள் கவனிக்க வேண்டியிருக்கும்.
2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் EPFO ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

