விருதுநகர்: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் தேர்தல் தோல்வி குறித்துத் திரையரங்கில் காணொளி திரையிடப்பட்ட விவகாரத்தில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் தனது மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாகத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாம் பேசிய பழைய வீடியோ ஒன்றைப் பகிர்ந்து அவர் விளக்கமளித்துள்ளார்.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சியின்போது, விருதுநகரில் உள்ள திரையரங்கில் வாழ்த்து வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில் விஜய பிரபாகரன் குறித்த காணொளி இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து எம்.எல்.ஏ செல்வம் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட அந்தக் காணொளி எனது கவனத்திற்கோ அல்லது அனுமதிக்கோ கொண்டுவரப்படாமல், என் மீது அன்பு கொண்ட சிலரால் வெளியிடப்பட்டுள்ளது. இச்செயல் குறித்து அறிந்தவுடன் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களை எச்சரித்ததுடன் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது."
நாகரிக அரசியலே எங்களின் நிலைப்பாடு:
"அண்ணன் திரு. விஜய பிரபாகரன் மற்றும் அவர் சார்ந்த கட்சிக்கு எதிராக எங்களுக்கு எப்போதுமே தவறான எண்ணம் கிடையாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது (11-04-2024) அளிக்கப்பட்ட நேர்காணலிலேயே, 'அண்ணன் விஜய பிரபாகரனுக்கு அவருடைய அரசியல் பாதை உள்ளது, எனக்கு என்னுடைய அரசியல் பாதை உள்ளது. மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் அனைவரும் செயல்படுகிறோம்; யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்' என்று குறிப்பிட்டிருந்தேன். அதுவே எனது உறுதியான நிலைப்பாடாகும்."
"நாங்கள் ஜனநாயக ரீதியில் நாகரிக அரசியலை மேற்கொள்பவர்கள் என்பதற்கு அந்த நேர்காணலே சான்றாகும். எனவே, இந்தச் சம்பவத்தைத் தவறான நோக்கில் அணுக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சர்ச்சைக்குரிய காணொளியால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால், அதற்காக எனது மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

