தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதியான சூர்யா - ஜோதிகா தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு, மகள் தியா மற்றும் மகன் தேவ் முன்னிலையில் மீண்டும் திருமண உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டுள்ளனர்.
சூர்யா - ஜோதிகா இருவரும் 1999-ம் ஆண்டு ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர். தொடர்ந்து ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த அவர்கள், 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், தங்களது திருமண வாழ்க்கையின் 20 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக வெளிநாட்டில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமண உறுதிமொழிகளை மீண்டும் புதுப்பித்துள்ளனர். இந்த நிகழ்வில் அவர்களது குழந்தைகள் தியா மற்றும் தேவ், நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கியவர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை சூர்யா - ஜோதிகா தம்பதி சமூக வலைதளத்தில் ‘The Sequel’ என்ற பெயரில் பகிர்ந்துள்ளனர். 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட அன்பு, கருத்து வேறுபாடுகள், விட்டுக்கொடுத்தல் மற்றும் ஒருவருக்கொருவர் அளித்த ஆதரவை நினைவுகூரும் வகையில் இந்த உறுதிமொழி புதுப்பிப்பு நிகழ்வு அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

