நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள ‘லவ்’ தமிழ் வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து, ஷோரன்னராகவும் செயல்பட்டுள்ளார். நவீன கால காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
டேட்டிங் ஆப் நிறுவனர்களாக அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி
இந்தத் தொடரில் ஐஸ்வர்யா லட்சுமி ‘தாரா’ என்ற கதாபாத்திரத்திலும், அர்ஜூன் தாஸ் ‘மேத்யூ’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இருவரும் போட்டி போடும் டேட்டிங் ஆப் நிறுவனங்களின் நிறுவனர்களாக காட்சியளிக்கின்றனர்.
தாரா நடத்தும் ‘FOUND’ செயலி, இருவரின் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஜோடியை தேர்வு செய்கிறது. அதேநேரத்தில், மேத்யூவின் ‘Find My Bae’ செயலி காதலில் ஏற்படும் உடனடி ஈர்ப்பு மற்றும் கெமிஸ்ட்ரியை முக்கியமாகக் கருதுகிறது.
இருவரும் தங்களது தொழிலில் மற்றவர்களுக்கு காதல் துணையைத் தேடிக் கொடுத்தாலும், சொந்த வாழ்க்கையில் காதல் விவகாரத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஒரு சவால் உருவாகிறது. அதன்பிறகு அவர்களது உறவில் ஏற்படும் மாற்றங்களே தொடரின் கதைக்களமாக அமைந்துள்ளன.
அக்டோபர் 2-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியீடு
காதல், நட்பு, குடும்பம், லட்சியம் உள்ளிட்ட அம்சங்களை நவீன டேட்டிங் உலகின் பின்னணியில் இந்தத் தொடர் பேசுகிறது. ‘கெமிஸ்ட்ரியா? அல்லது பொருத்தமா?’ என்ற கேள்வியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
‘லவ்’ வெப் சீரிஸ் அக்டோபர் 2-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

