பொள்ளாச்சியில் ‘டோரதி’ திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதற்கான கதை தயாராக இருப்பதாகவும், அவர் சம்மதம் தெரிவித்தால் படத்தை இயக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரசிகர்களை சந்தித்த ‘டோரதி’ படக்குழு
இந்நிலையில், ‘டோரதி’ திரைப்படம் பொள்ளாச்சி ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் இன்று திரையரங்கிற்கு சென்றனர்.
அங்கு ரசிகர்களை சந்தித்த படக்குழுவினர், அவர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ், ‘டோரதி’ படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
“படத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது”
கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “எந்த நோக்கத்திற்காக ‘டோரதி’ திரைப்படம் எடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்திற்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
மேலும், படத்தை விமர்சிப்பவர்கள் முழுமையாக படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ‘டோரதி’ தொடர்பான விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்; விமர்சனங்களுக்குப் பதிலாக திரைப்படம் உருவாக்கியுள்ள விவாதத்தை முக்கியமாக பார்க்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
“சூப்பர் ஸ்டார் படத்திற்கான கதை தயாராக உள்ளது”
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், ரஜினிகாந்த் தற்போது ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்த பின்னர் ‘டோரதி’ திரைப்படத்தை பார்ப்பதாக அவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், “படம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன், வாழ்த்துக்கள்” என ரஜினிகாந்த் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சூப்பர் ஸ்டாரை இயக்குவதற்கான கதை தயாராக உள்ளது. தலைவர் ஓகே சொன்னால், அந்தப் படத்தை இயக்க நான் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதனால், கார்த்திக் சுப்புராஜ் – ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

