தமிழகத்தில் இன்று (அக்.1) 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
இன்றைய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்கள்: நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,ஈரோடு,திண்டுக்கல்,தேனி,மதுரை,தென்காசி,திருநெல்வேலி. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையுடன் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
திருச்சி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
அடுத்த சில நாட்களிலும் மழை தொடரும்
அக்டோபர் 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அக்டோபர் 3 முதல் 6-ம் தேதி வரை இதே பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15 முதல் 21-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

