தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கூடுதல் வகை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி கிடைக்கிறது.
40 கி.மீ. வரம்பு நீக்கம்
இதுவரை நகர சாதாரண அரசு பேருந்துகளிலும், 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வந்தனர். ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் விரிவாக்கத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இதனால், முன்பு இருந்த 40 கி.மீ. என்ற வரம்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இனி பயணத்தை கணக்கிட வேண்டியதில்லை. பயணிக்கும் பேருந்து திட்டத்தின் கீழ் உள்ளதா என்பதே முக்கியமானதாகும்.
நீண்ட தூரப் பயணமும் சாத்தியம்
அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களில், பெண்கள் ஒரு பேருந்தில் இருந்து மற்றொரு பேருந்துக்கு மாறி நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, திருச்சி–திண்டுக்கல், தஞ்சாவூர்–நாகப்பட்டினம், திண்டிவனம்–விழுப்புரம், விருத்தாசலம்–திருச்சி, கோவை–பழனி, ஈரோடு–சேலம், மதுரை–விருதுநகர், விருதுநகர்–கோவில்பட்டி, திருநெல்வேலி–நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் தகுதியான அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
12,692 அரசு பேருந்துகள்
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 12,692 அரசு பேருந்துகள் கொண்டு வரப்பட உள்ளன. இதன் மூலம் தினமும் சுமார் 84 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 2 முதல் பெண்கள் தங்களின் வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக கூடுதல் வகை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.

