விருதுநகர் மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அரசாணை 123-ன் படி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 2026 ஏப்ரல் முதல் ஓய்வுபெற்றோருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்க வேண்டும் மற்றும் 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், ஓய்வுபெறும்போதே அனைத்துப் பணப்பலன்களையும் வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை (அரியர்) உடனடியாக வழங்க வேண்டும் மற்றும் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

