விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலில், ஆடிப்பூரத் திருவிழாவின் 7-ஆம் நாள் நிகழ்வாகப் புகழ்பெற்ற 'சயன சேவை' வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
'கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்' என்று ஆன்மீகப் பெருமையுடன் போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில், திருவடி பூரத் திருவிழா கடந்த மாதம் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 'ஐந்து கருட சேவை' கடந்த 10-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், இத்திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான 'சயன சேவை' கிருஷ்ணன் கோயிலில் உள்ள முன் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, ஸ்ரீ ஆண்டாளின் மடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனித்திருக்கும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பொதுவாக வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிகளிலேயே ஸ்ரீ மகாலட்சுமி வீற்றிருப்பார். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே மகாலட்சுமியின் அவதாரமான ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலைவைத்து ஸ்ரீ ரங்கநாதர் சயனித்திருக்கும் அபூர்வ திருக்கோலம் காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும். இந்த அரிய காட்சினைக் காண்பதற்காகத் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூரத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான உலகப் புகழ்பெற்ற தேரோட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

