கோவை பெரியகடைவீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் திருக்கோயிலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆடி மாத ஐந்தாவது வெள்ளிக்கிழமை விழா பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த ஆண்டு, சுமார் 5 டன் காய்கறிகளை பயன்படுத்தி இந்திய வரைபடம் மற்றும் தேசிய மூவர்ணக் கொடியை மையமாகக் கொண்ட சிறப்பு அலங்காரம் அமைக்கப்பட்டது.
கோயிலின் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் கூறுகையில், நாட்டில் அமைதி நிலவவும், பருவமழை சிறப்பாக பெய்யவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நோயின்றி வளமாக வாழவும் வேண்டி இந்த அலங்காரம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். அம்மன் இந்திய வரைபடத்தின் மீது எழுந்தருளிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த அலங்காரம், தேச நலனையும் ஆன்மிக உணர்வையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
மேலும், வெண்டைக்காய், முள்ளங்கி, கேரட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளால் தேசிய மூவர்ண நிறங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 வகையான காய்கறிகள் பயன்படுத்தப்பட்ட இந்த அலங்காரத்தில் தேசிய பறவை மற்றும் தேசிய விலங்கின் உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
“தேசமும் தெய்வமும் இரு கண்கள்” என்ற கருத்தை பிரதிபலிக்கும் இந்த சிறப்பு அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து, தங்களது குடும்ப நலம், நாட்டின் முன்னேற்றம் மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்படாதிருக்க வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

