கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
ஓணம் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம்
ஓணம் பண்டிகையின் முக்கிய அடையாளமான அத்தப்பூக்கோலம், கோவில் சுவாமி சன்னதி முன்பு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
டன் கணக்கில் பல்வேறு வகையான வண்ணமயமான மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அத்தப்பூக்கோலம் பக்தர்களையும், கோவிலுக்கு வருகை தரும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தரிசனம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகம் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

