வேலூர்: ஆடி 6-ம் வெள்ளியை முன்னிட்டு வேலூரில் உள்ள ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் கோவில் மற்றும் செல்லியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி 6-ம் வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி 6-ம் வெள்ளியை முன்னிட்டு செல்லியம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மலர் மாலைகள் மற்றும் பழ மாலைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அம்மனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு இரு கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் விழாக்கோலம் பூண்டிருந்தது.

