திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. இதையடுத்து பக்தர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படும் இந்த டிக்கெட்டுகளை, அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு சென்று தரிசனம் செய்யலாம். டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், முன்பதிவு தொடங்கும் நேரத்தில் பக்தர்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், திருமலை மற்றும் திருப்பதியில் தங்குவதற்கான அறை முன்பதிவு வசதியும் ஆன்லைனில் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க உள்ளது. பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடங்களை TTD-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

