பொள்ளாச்சியில் அமைச்சரிடம் மனு வழங்க வந்த 80 வயது மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அமைச்சர் விக்னேஷ் அவருக்கு ஆறுதல் கூறி, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டு, மாணவர்கள் கொண்டு வந்த தீபச்சுடரை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அமைச்சர் விருந்தினர் மாளிகைக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தங்களது வீடுகளை அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும், இதனால் தங்களது குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, அவர்களுடன் வந்திருந்த 80 வயது மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காரில் புறப்பட தயாராக இருந்த அமைச்சர் விக்னேஷ், உடனடியாக இறங்கி வந்து மூதாட்டிக்கு ஆறுதல் கூறினார். மேலும், “உங்கள் வீடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது; நான் பொறுப்பு” என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த பின்னர் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவத்தால் விருந்தினர் மாளிகை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

