தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சியையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்தை திரும்பப் பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 30-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் அறிவித்திருந்தது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அமைச்சர் வன்னி அரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற கருத்தை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

