தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக கோவை வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக, அதிமுக மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுக தன்னை கொள்கைக் கட்சி எனக் கூறிக்கொண்டாலும், இதுவரை கொள்கை அடிப்படையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்ததில்லை என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார். தேர்தல் நேரங்களில் தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் பெண்களை மையப்படுத்திய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் குறித்து திமுக சார்பில் கடந்த காலங்களில் தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது உதயநிதி ஸ்டாலினும் இதுபோன்ற பிரச்சாரத்தையே மேற்கொள்வதாக விமர்சித்தார்.
“கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை கூறி வாக்கு கேட்கவில்லை”
திமுக கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளை முன்வைத்து வாக்கு கேட்கவில்லை என்றும், பணபலம் மற்றும் கூட்டணி பலத்தை நம்பியே தேர்தலை எதிர்கொள்வதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.
இத்தகைய தனிப்பட்ட மற்றும் அவதூறான பிரச்சாரங்களை தமிழக மக்களும், குறிப்பாக கொங்கு மண்டல பெண்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்திய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.
அதிமுக குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
தற்போதைய அதிமுக, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவாக இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
ஜெயலலிதா காலத்தில் கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த பலர் தற்போது அதிமுகவில் இருந்து விலகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோரின் பெயர்களை குறிப்பிட்டார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கடந்தகால தேர்தல் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்தார். ஜெயலலிதா தலைமையில் அதிமுக வலுவாக இருந்ததாகவும், பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் செயல்பாடு மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“அதிமுகவை மறைமுகமாக வழிநடத்துவது யார்?”
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் மட்டுமே இருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறினார். முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகியதற்கு மிதுனின் செயல்பாடுகளே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சார திட்டமிடலில் மிதுன் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், அவர் வேட்பாளர்களை நேர்காணல் செய்ததாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம் செங்கோட்டையனின் இல்லத்தில் இருந்து தொடங்கியதாக குறிப்பிட்ட அவர், பின்னர் செங்கோட்டையனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக விமர்சித்தார்.
“திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுகின்றன”
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக இணைந்து செயல்படுவதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.
திமுகவின் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருவதாகவும், “திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின்; திமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்றும் அவர் விமர்சித்தார்.
மிதுனை முன்னிலைப்படுத்துவதற்காக திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
“கொங்கு மண்டலத்தின் முகமாக இருப்போம்”
தமிழக வெற்றிக் கழகம் கொங்கு மண்டலத்தின் முகமாக செயல்படும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
கொங்கு மண்டலமும் சென்னை மண்டலமும் தமிழக வெற்றிக் கழகத்தை முதலில் ஆதரித்த பகுதிகள் எனக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் விஜய்யின் பிரச்சாரமும் சுற்றுப்பயணமும் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என தெரிவித்தார்.
கொங்கு மண்டல தொழில்துறையினருக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பாமக குறித்து கேள்வி
கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியில் பாமகவின் ஆதரவு முக்கியமானதாக இருந்ததாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். பாமக ஆதரவு இல்லையென்றால் சில தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
எடப்பாடி தொகுதி தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், வேட்பாளர் தொடர்பான விவகாரத்தில் பணப் பரிமாற்றம் நடைபெற்றதா என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை அவர் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடவில்லை.
விஜயகாந்த் குறித்து கருத்து
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் திமுகவுக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்களை நினைவுபடுத்திய ஆதவ் அர்ஜுனா, தற்போது பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் இணைந்திருப்பதாக விமர்சித்தார்.
விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாடுகளை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

