விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்குக் காவல் நிலையம் எதிரே திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் திடீரென தீப்பற்றி பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சில இருசக்கர வாகனங்கள் லேசான சேதமடைந்தன.
சிவகாசி கிழக்குக் காவல் நிலையம் எதிரே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திறந்தவெளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள புல்வெளியில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களிலும் தீப்பற்றியது.
இதில் சில இருசக்கர வாகனங்கள் தீயில் சிக்கி லேசான சேதமடைந்தன. தீ வேகமாக பரவியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ விபத்தில் இருந்து தப்பின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

